உலகக் கோப்பை கால்பந்து தொடரின் குரூப் ‘டி’ லீக் போட்டியில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய அமெரிக்கா, நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியுள்ளது.
சியாட்டிலில் நடைபெற்ற இந்த போட்டியில், அமெரிக்க அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியன் புலிசிக் காயம் காரணமாக விளையாடவில்லை. இருப்பினும், போட்டி தொடங்கிய முதலே அமெரிக்க வீரர்கள் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
ஆட்டத்தின் ஆரம்பத்தில் அமெரிக்க வீரர் பலோகன் அடித்த பந்தை தடுக்க முயன்ற ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பர்கெஸ், தவறுதலாக தனது சொந்த கோல் வலையில் பந்தை செலுத்தினார். இதன் மூலம் அமெரிக்கா 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
39-வது நிமிடத்தில் அமெரிக்காவின் அலெக்ஸ் ப்ரீமேன் மற்றும் ஆஸ்திரேலியாவின் பால் ஒகான் மோதிக்கொண்டதில் இருவருக்கும் தலையில் காயம் ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் களமிறங்கிய ப்ரீமேன், 43-வது நிமிடத்தில் கோல் அடித்தார். முதலில் ஆப்சைடு என அறிவிக்கப்பட்ட இந்த கோல், வார் (VAR) பரிசீலனைக்குப் பிறகு செல்லுபடியாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது பாதியில் ஆஸ்திரேலியா கோல் அடிக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், அமெரிக்காவின் வலுவான தற்காப்பு ஆட்டத்தை உடைக்க முடியவில்லை. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற அமெரிக்கா, சொந்த ரசிகர்கள் முன்னிலையில் நாக் அவுட் சுற்றுக்கான இடத்தை உறுதி செய்தது.
