சென்னை: கஞ்சா போதையில் தமிழகம் தடம்புரண்டுள்ளதாக தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஞ்சா போதையில் தமிழகம் தடம்புரண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனையின் பிரசவ வார்டிற்குள் கஞ்சா போதையில் இருந்த சிலர் புகுந்து, அங்கு இருந்த நோயாளிகள் மற்றும் டாக்டர்களை அரிவாளைக் காட்டி மிரட்டிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக அங்கு இருந்த யாருக்கும் உடல்ரீதியான பாதிப்பு ஏற்படவில்லை என்பது ஓரளவு ஆறுதலாக இருந்தாலும், அரசு மருத்துவமனைக்குள் மக்களுக்கு மரண பயத்தை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை எளிதில் கடந்து செல்ல முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம்” என்று மேடையில் உறுதிமொழி எடுத்த முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியில், பெட்டிக்கடைகளில் கூட போதைப் பொருட்கள் எளிதாகக் கிடைக்கின்றன என்று குற்றம்சாட்டியுள்ளார்.
அரசுப் பள்ளிகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பல இடங்களில் குற்றவாளிகள் போதையில் சுதந்திரமாகச் சுற்றித் திரிகின்றனர் என்றும் கூறியுள்ளார். போதையின் தாக்கத்தில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது தமிழகத்தில் வழக்கமாகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதால் போதையில் ரகளை செய்பவர்களை கண்டிக்க பொதுமக்களே அஞ்சுகின்றனர் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால் இந்த நிலையை மறைத்து “தமிழகத்தில் போதை நடமாட்டமே இல்லை” என்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் திமுகவின் உடன்பிறப்புகளை பார்த்தால் கடும் கோபம் வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இவர்களைப் போன்ற நாடகக்காரர்களின் கரங்களில் இனி தப்பித்தவறியும் அதிகாரம் செல்லக்கூடாது என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
