துபாய்: துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேற்காசிய பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருகிறது. சவுதி, ஓமன், பஹ்ரைன் மற்றும் துபாய் உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதுவரை யுஏஇ மீது ஈரான் 1,800க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இன்று (மார்ச் 16) துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே உள்ள எண்ணெய் கிடங்கை குறிவைத்து ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. இதனால் எண்ணெய் கிடங்கில் தீப்பற்றியது. நீண்ட நேரம் போராடிய துபாய் தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தினர்.
சம்பவ இடத்திற்கு அவசரக்கால மீட்புக்குழுக்கள் விரைந்து சென்று பணியில் ஈடுபட்டனர். தற்போது நிலைமை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக துபாய் அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இதுகுறித்து துபாய் ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே நடந்த ட்ரோன் தாக்குதலால் அங்குள்ள எண்ணெய் கிடங்கு ஒன்று பாதிக்கப்பட்டதாகவும், அங்கு ஏற்பட்ட தீயை துபாய் மீட்புக்குழுவினர் வெற்றிகரமாக கட்டுப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து எமிரேட்ஸ் விமான நிறுவனம் துபாயில் இருந்து புறப்படும் மற்றும் துபாய் வந்து சேரும் அனைத்து விமானங்களையும் ரத்து செய்துள்ளது.
மேலும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சில விமானங்கள் அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்றி அனுப்பப்பட்டதாக துபாய் விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
