கங்கை நீர் ஒப்பந்தமே இந்தியாவுடனான உறவை தீர்மானிக்கும்: வங்கதேசம் எச்சரிக்கை
டாக்கா: புதிய கங்கை நதி நீர் பகிர்வு ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவுடனான எதிர்கால உறவு அமையும் என வங்கதேசம் தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையிலான கங்கை நீர் பகிர்வு ஒப்பந்தம் 1996-ம் ஆண்டு அப்போதைய இந்திய பிரதமர் தேவகவுடா மற்றும் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா முன்னிலையில் கையெழுத்தானது. 30 ஆண்டுகள் காலவரையிலான இந்த ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.
இதையடுத்து, நீண்டகால அடிப்படையில் புதிய ஒப்பந்தம் உருவாக்கப்பட வேண்டும் என வங்கதேசம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக வங்கதேச அரசியலில் ஏற்பட்ட மாற்றங்களை தொடர்ந்து, இந்தியாவுடனான உறவில் அந்த நாடு புதிய அணுகுமுறையை பின்பற்றுவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதுகுறித்து வங்கதேச தேசியவாத கட்சியின் பொதுச்செயலரும், அந்நாட்டின் உள்ளாட்சி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான மிர்சா பக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “வங்கதேச மக்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப புதிய கங்கை நதி நீர் ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற தெளிவான செய்தியை இந்திய அரசுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்” என்றார்.
மேலும், “இந்தியாவுடன் நல்லுறவு தொடர வேண்டுமெனில், புதிய ஒப்பந்தம் மிகவும் முக்கியமானது. தற்போதைய ஒப்பந்தத்தை புதுப்பிப்பதில் நிலவும் நிச்சயமற்ற சூழல் எதிர்கால நதிநீர் பகிர்வு குறித்து கவலை ஏற்படுத்தியுள்ளது” என்றும் தெரிவித்தார்.
“புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வரை தற்போதைய ஒப்பந்தம் தொடர வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
அதேபோல், எதிர்கால நதிநீர் பகிர்வு ஒப்பந்தங்கள் குறிப்பிட்ட கால வரம்புக்குள் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வங்கதேசத்தின் 17 கோடி மக்களில் பெரும்பாலானோர் தங்களின் வாழ்வாதாரம், பல்லுயிர் வளம் மற்றும் கிளை நதிகளுக்கான நீர் விநியோகத்திற்காக கங்கை நீரை நம்பியுள்ளதாகவும் மிர்சா பக்ரூல் இஸ்லாம் ஆலம்கீர் தெரிவித்துள்ளார்.
