முதல்வர் விஜயின் கேரள பயணம் திடீர் ரத்து
சென்னை: கேரள மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த முதல்வர் விஜய், தனது பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கேரள சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.டி.சதீசன் இன்று கேரள முதல்வராக பதவியேற்கிறார்.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்த பதவியேற்பு விழாவில், கேரள கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இதில் காங்கிரஸ் தேசிய தலைவர்கள் பலரும் பங்கேற்க உள்ளனர்.
தமிழக முதல்வரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்க்கும் இந்த விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதற்காக இன்று காலை தனி விமானத்தில் திருவனந்தபுரம் செல்ல அவர் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது.
ஆனால், இந்த பயணத்தை முதல்வர் விஜய் திடீரென ரத்து செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வராக பதவியேற்ற பிறகு முதலில் டில்லி சென்று ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திப்பது அரசியல் மரபாக இருப்பதால், அதற்கு முன்னுரிமை வழங்கும் வகையில் கேரள பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, அடுத்த வாரம் டில்லி செல்ல முதல்வர் விஜய் தயாராகி வருகிறார்.
டில்லி பயணத்தின் போது ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை அவர் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமர் மோடி வெளிநாட்டு சுற்றுப்பயணத்தை முடித்து இந்தியா திரும்பிய பிறகு இந்த சந்திப்பு நடைபெறும் என கூறப்படுகிறது.
