1.69 கோடி ஜாதி சான்றிதழ்கள் மறுஆய்வு; மேற்கு வங்க அரசின் அதிரடி உத்தரவு
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் கடந்த 15 ஆண்டுகளில் வழங்கப்பட்ட 1.69 கோடி ஜாதி சான்றிதழ்களை மறுசரிபார்ப்பு செய்ய புதிய பாஜ அரசு உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் அரசு, 2011 முதல் மாநிலத்தில் ஆட்சி செய்து வந்தது. சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜ 207 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.
இதையடுத்து, பாஜவைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி மேற்கு வங்க முதல்வராக பதவியேற்றார். மாநிலத்தின் முதல் பாஜ முதல்வர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.
பதவியேற்ற பிறகு, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை சுவேந்து அதிகாரி அரசு மேற்கொண்டு வருகிறது.
முதல் அமைச்சரவை கூட்டத்தில், வங்கதேச எல்லையில் வேலி அமைப்பதற்கான நிலத்தை 45 நாட்களுக்குள் எல்லை பாதுகாப்புப் படைக்கு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதேபோல், மாநிலத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணிகளை உடனடியாக தொடங்கவும் அரசு முடிவு செய்தது.
மேலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை வழிபாட்டில் ‘வந்தே மாதரம்’ பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் ஜாதி சான்றிதழ்கள் வழங்கியதில் பெரும் முறைகேடுகள் நடந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து, 2011 முதல் வழங்கப்பட்ட அனைத்து ஜாதி சான்றிதழ்களையும் மறுஆய்வு செய்ய மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், “2011 முதல் இதுவரை மாநிலம் முழுவதும் 1.69 கோடி ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில், 1 கோடி பட்டியல் ஜாதி சான்றிதழ்கள், 21 லட்சம் பழங்குடியினர் சான்றிதழ்கள் மற்றும் 48 லட்சம் பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்கள் அடங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘துவாரே சர்க்கார்’ முகாம்கள் மூலம் மட்டும் 47.8 லட்சம் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் வழங்கப்பட்ட சில ஜாதி சான்றிதழ்கள் போலியானவை என புகார்கள் வந்துள்ளதால், அனைத்து சான்றிதழ்களும் நடைமுறையில் உள்ள சட்ட விதிகளின் அடிப்படையில் மறுசரிபார்ப்பு செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
முறைகேடாக வழங்கப்பட்ட சான்றிதழ்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட சட்டங்களின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மறுசரிபார்ப்பு பணிகளில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகளில் நீக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழ்களும் ஆய்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
