தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் பொருளாதார மற்றும் எரிசக்தி நிலைத்தன்மையை கருத்தில் கொண்டு மக்களிடம் பல்வேறு வேண்டுகோள்களை முன்வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் 9,400 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
இதில், ஹைதராபாத் – பணஜி பொருளாதார வழித்தடத்தில் அமைந்துள்ள குடேபெல்லூர் முதல் மஹபூப்நகர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் திட்டம் மற்றும் சங்காரெட்டி மாவட்டத்தில் அமைய உள்ள ஜஹீராபாத் தொழிற்பேட்டை திட்டம் உள்ளிட்டவை இடம்பெற்றன.
அப்போது பேசிய பிரதமர் மோடி, மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலை சுட்டிக்காட்டி, இறக்குமதி செய்யப்படும் பெட்ரோலிய பொருட்களை தேவைக்கேற்ப மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அவ்வாறு செய்வதன் மூலம் அன்னிய செலாவணியை சேமிப்பதுடன், போர் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளில் சூரிய ஆற்றல் துறையில் இந்தியா உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக உயர்ந்துள்ளதாகவும், பெட்ரோல் – எத்தனால் கலப்பு திட்டத்தில் பல்வேறு முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மத்திய அரசு முதற்கட்டமாக அனைத்து வீடுகளுக்கும் சமையல் எரிவாயு இணைப்பு வழங்க கவனம் செலுத்தியதாகவும், தற்போது குழாய் வழி எரிவாயு மற்றும் சி.என்.ஜி. பயன்பாட்டை ஊக்குவித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக, உலகளவில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடியை இந்தியா திறம்பட சமாளித்து வருவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
இதையடுத்து மக்களிடம் சில வேண்டுகோள்களையும் அவர் முன்வைத்தார்.
“ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம். ஓராண்டுக்கு வெளிநாட்டு சுற்றுலா செல்ல வேண்டாம். பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டை குறைத்து, அதிகளவில் பொது போக்குவரத்தை பயன்படுத்துங்கள்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் காசிபேட் – விஜயவாடா ரயில் தட திட்டத்தின் பல்வேறு பிரிவுகள், ஹைதராபாத்தில் உள்ள க்ரீன்பீல்டு பெட்ரோலியம் மற்றும் எண்ணெய் முனையம், காசிபேட் ரயில் மேம்பாலம் மற்றும் வாரங்கலில் உள்ள பிரதமர் மித்ரா பூங்கா உள்ளிட்ட திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தெலுங்கானா ஆளுநர் சிவ பிரதாப் சுக்லா, முதல்வர் ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
