எத்தனால் கலந்த எரிபொருள் வாகனங்களில் எறும்புகள் மொய்க்கும் என்ற சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை என பாரத் பெட்ரோலியம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று எரிபொருள் பயன்பாட்டை அதிகரிப்பதற்கும் மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இதையடுத்து, சமீபத்தில் அதிக சதவீத எத்தனால் கலந்த எரிபொருளும் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், எத்தனால் கலந்த எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்களில் எறும்புகள் அதிகமாக மொய்ப்பதாக சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் மற்றும் பதிவுகள் பரவின. இதற்கு விளக்கம் அளித்த பாரத் பெட்ரோலியம், எரிபொருள் தரத்திலான எத்தனால் நொதித்தல் மற்றும் காய்ச்சி வடித்தல் முறையில் தயாரிக்கப்படுவதால் அதில் சர்க்கரைச் சத்துக்கள் முழுமையாக நீக்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளது.
மேலும், அந்த எத்தனாலில் பூச்சிகளை விரட்டும் தன்மை கொண்ட மூலக்கூறுகள் சேர்க்கப்படுவதாகவும், பெட்ரோலுடன் கலந்த பிறகும் ஹைட்ரோகார்பன் வாசனையே அதிகமாக இருப்பதால் எறும்புகள் அல்லது பிற பூச்சிகளை ஈர்க்கும் எந்த காரணியும் இல்லை என்றும் நிறுவனம் விளக்கியுள்ளது.
எனவே, எத்தனால் கலந்த பெட்ரோல் எறும்புகளை ஈர்க்கும் என்ற சமூக ஊடக பதிவுகள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும், மக்கள் இதுபோன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
