தமிழக சட்டசபையில் ஆளுநர் உரை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். கவர்னர் உரை புதிய திட்டங்களை கொண்டதாக இல்லாமல், ‘ரீல்ஸ் கன்டென்ட் மெட்டீரியல்’ போல இருப்பதாக அவர் கூறினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களையே தற்போதைய தமிழக வெற்றிக் கழக அரசு மீண்டும் அறிவித்துள்ளதாகவும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக எந்த புதிய அறிவிப்பும் கவர்னர் உரையில் இடம்பெறவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், திமுக அரசின் பல்வேறு திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளே கவர்னர் உரையில் இடம்பெற்றுள்ளதாகவும், தமிழக வளர்ச்சிக்கான புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
அதிமுக எம்எல்ஏக்களை ஆளுங்கட்சி தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், இதை “Panic Buying” என விமர்சித்தார். பெண்களின் பாதுகாப்பு குறித்து தேர்தல் பிரசாரத்தில் கூறப்பட்ட வாக்குறுதிகள் தற்போதைய ஆட்சியில் நிறைவேறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், திமுக ஆட்சிக் காலத்தில் ஆளுநர் அரசு உரையில் திருத்தங்களை மேற்கொள்வது வழக்கமாக இருந்த நிலையில், தற்போது எந்த மாற்றமும் இல்லாமல் முழுமையாக உரையை வாசித்திருப்பது, தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் பாஜகவுக்கும் இடையே இணக்கமான சூழல் இருப்பதாக சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் உதயநிதி கூறினார்
