மேற்காசிய மற்றும் வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நெருக்கடியை தணிக்க அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளுக்கு ஈரான் அளித்த பதில் ஏற்றுக்கொள்ள முடியாதது என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மேற்காசிய நாடான ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கைகளை தொடங்கின. இந்த மோதல் தீவிரமடைந்ததையடுத்து, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கிய இடம் வகிக்கும் ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது.
இதன் காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததுடன், பல்வேறு நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானது.
இந்த நிலையில், ஈரானின் தலையீடு இல்லாமல் சர்வதேச நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும் திட்டத்தை அதிபர் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஈரான், தங்களது எல்லைப் பகுதிகளில் அன்னிய நாட்டுப் போர்க்கப்பல்கள் நடமாடினால் தாக்குதல் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்தது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த டிரம்ப், “ஈரான் அளித்த பதில் எனக்கு பிடிக்கவில்லை. அது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனிய கையிருப்பை நெருங்கும் எவரையும் அமெரிக்கா தவிடுபொடியாக்கும். ஈரான் ராணுவ ரீதியாக ஏற்கெனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டது” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் பிரிட்டன் தனது ‘டிராகன்’ போர்க்கப்பலை அப்பகுதிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஈரான், ஹார்முஸ் பகுதியில் பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் நாடுகள் போர்க்கப்பல்களை நிலைநிறுத்தக்கூடாது என்றும், அப்படி நடந்தால் தக்க பதிலடி வழங்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
அதேநேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக தடையற்ற கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்கவும், கப்பல்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் பிராந்திய நாடுகள் திடமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
