கூடியது 17வது தமிழக சட்டசபை: புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
17வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டம் இன்று காலை (மே 11) 9.30 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று முதல்வராக பதவியேற்றார். அவருடன் ஒன்பது அமைச்சர்களும் பதவியேற்றனர்.
இதனைத் தொடர்ந்து, சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ கருப்பையா தற்காலிக சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர். முதலாவதாக பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்றார். அதன் பின்னர் ஒவ்வொரு உறுப்பினரும் வரிசையாக பதவியேற்றனர்.
புதிய எம்எல்ஏக்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்தார்.
இதற்கிடையில், நாளை சட்டசபையில் சபாநாயகர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேலும், ஆளுநர் ராஜேந்திர அர்லேக்கர் வழங்கிய காலக்கெடுவிற்குள், தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான புதிய அரசுக்கு சட்டசபையில் பெரும்பான்மை இருப்பதை முதல்வர் விஜய் நிரூபிக்க வேண்டியுள்ளது.
மறுபுறம், தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி தலைமையில் திமுக எம்எல்ஏக்களின் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது.
தமிழக சட்டசபை நிகழ்வுகள் தினமலர் யூடியூப் உள்ளிட்ட இணைய தளங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.
