சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை அமைப்பு: தமிழக அரசு அரசாணை வெளியீடு
பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், “சிங்கப்பெண்” என்ற பெயரில் சிறப்பு அதிரடிப்படையை அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தப் படை ஐஜி தலைமையில் செயல்படும் என்றும், முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வராக பொறுப்பேற்றவுடன் விஜய் கையெழுத்திட்ட மூன்று முக்கிய கோப்புகளில் “சிங்கப்பெண்” திட்டமும் இடம்பெற்றிருந்தது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் மற்றும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் சிறப்பு பாதுகாப்புப் படை உருவாக்கப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த சிறப்பு அதிரடிப்படையை உருவாக்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
முதற்கட்டமாக போலீஸ் தலைமையகத்தில் இந்த சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு ஐஜி, ஒரு எஸ்பி, இரண்டு டிஎஸ்பிகள், நான்கு காவல் ஆய்வாளர்கள், எட்டு எஸ்ஐக்கள் மற்றும் 20 காவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
பெண்களுக்கு பொதுஇடங்களில் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்குவது மற்றும் சட்டவிரோத செயல்களை தடுப்பது இந்தப் படையின் முக்கிய நோக்கமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் உள்ளிட்ட பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் இந்த அதிரடிப்படையின் கண்காணிப்பு அதிகரிக்கப்படும்.
மேலும், பெண்கள் தொடர்பான புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பணிகளிலும் “சிங்கப்பெண்” சிறப்பு அதிரடிப்படை ஈடுபடும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தப் படை முதல்வரின் நேரடி கண்காணிப்பில் செயல்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
