சென்னை: இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் ஒரு செலவு அல்ல, அது ஒரு முதலீடு என தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தி.மு.க. தேர்தல் அறிக்கை குறித்து எழும் விமர்சனங்களுக்கு பதிலளித்தார். தேர்தல் அறிக்கையை ‘காப்பி’ என கூறுவது பொருத்தமற்றது என்றும் அவர் தெரிவித்தார்.
இல்லத்தரசிகளுக்கான கூப்பன் திட்டம் குறித்து விளக்கமளித்த அவர், முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் வழங்கப்பட்ட காஸ் அடுப்பு திட்டத்தை எடுத்துக்காட்டாக கூறினார். அப்போது செலவு குறைக்க ஒரு பர்னர் அடுப்பு வழங்கலாம் என்ற ஆலோசனைக்கு பதிலாக, இரண்டு பர்னர் அடுப்பு வழங்கி பெண்களின் நேரத்தை சேமிக்க வேண்டும் என்ற நோக்கமே இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.
அதேபோல், தற்போதைய கூப்பன் திட்டமும் பெண்களின் வேலைச்சுமையை குறைத்து, அவர்களுக்கு கூடுதல் நேரத்தை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாக கூறினார்.
வாஷிங் மிஷின், பிரிஜ், மிக்சி, கிரைண்டர் போன்ற சாதனங்கள் பயன்படுத்துவதால் இல்லத்தரசிகளின் நேரம் மிச்சமாகும். அந்த நேரத்தை அவர்கள் வேறு பயனுள்ள செயல்களில் பயன்படுத்த முடியும் என்பதால், இந்த திட்டத்தை முதலீடாக பார்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், கூப்பனை குறிப்பிட்ட பொருட்கள் வாங்குவதற்கே பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்தார்.
