சென்னை: தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு பா.ஜ. கட்சியின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பா.ஜ. 27 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று பேர் கொண்ட பட்டியல் தயாரித்து, கட்சியின் தேசிய தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த பட்டியலின் அடிப்படையில் இறுதி வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய அமைச்சர் மற்றும் தமிழக பா.ஜ. தேர்தல் பொறுப்பாளரான பீயூஷ் கோயல் இன்று சென்னை வருகிறார். அவரது தலைமையில் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்தில், வீடியோ கான்பரன்ஸ் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பா.ஜ. தேசிய தலைவர் நிதின் நபின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
கூட்டம் முடிந்ததும், தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பா.ஜ. வேட்பாளர்களின் பட்டியல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
மேலும், தேர்தலை முன்னிட்டு பா.ஜ. கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
