ஆண்டிபட்டி: “இலவசங்களை நோக்கி சென்று உங்கள் தன்மானத்தை இழக்காதீர்கள்,” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில், நாம் தமிழர் வேட்பாளர் கோமதியை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது:
இந்த தொகுதியில் வனத்துறை பிரச்சினை, கண்ணகி கோயிலுக்கு செல்ல வழியின்மை, வருஷநாட்டில் 80 கிராமங்களை அப்புறப்படுத்தும் திட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உள்ளன.
மேய்ச்சல் நிலங்கள் இல்லாமல், மலை அடிவாரங்களில் ஆடு, மாடுகளை மேய்க்க வனத்துறையினர் இடையூறு செய்கின்றனர். அதே நேரத்தில், கல் குவாரிக்காக மலைகளை வெட்டி எடுத்து செல்ல ஒப்பந்தங்கள் செய்து, 100 டன் முதல் 200 டன் வரை வெடி மருந்துகளை பயன்படுத்தி மலைகளை தகர்க்கின்றனர். அப்போது மட்டும் காட்டு விலங்குகள் பாதுகாப்பாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினார்.
ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படும் போது ஜனநாயகம் சாகி, பணநாயகம் வெற்றி பெறுகிறது. தேர்தலில் வெற்றிக்காக முதலீடு செய்பவர்கள், அதை பல மடங்கு லாபமாக மாற்ற நினைப்பார்கள்.
அதிகாரத்தில் இருந்தவர்கள் மக்களுக்கு என்ன செய்தனர்? மக்களுக்கு பிரச்சினை ஏற்படுத்தியவர்கள் ஒரு பக்கம்; பிரச்சினைகளை தீர்க்கும் நாங்கள் ஒரு பக்கம். இந்த இருவருக்கும் இடையே தான் போட்டி உள்ளது.
“நான் ஏசி பஸ் தருகிறேன்; அதில் காசு கொடுத்து செல்லுங்கள்,” என்றும் அவர் கூறினார்.
இலவசங்களை நோக்கி சென்று உங்கள் தன்மானத்தை இழக்க வேண்டாம். நிலம் மற்றும் வளம் சார்ந்த தொழிற்சாலைகளை தொடங்கி, ஆண்டிபட்டி தொகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்துவேன்.
எத்தனை காலம் இரட்டை இலைக்கும், உதயசூரியனுக்கும் ஓட்டு போடப்போகிறீர்கள்? இந்த இரு கட்சிகளும் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் மூடப்படுமா? கொலை, கொள்ளை நிறுத்தப்படுமா?
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. இரண்டும் ஒரே மாதிரியான கட்சிகள் தான். இந்த தொகுதியிலேயே ஒரே குடும்பத்தில் உள்ள அண்ணன், தம்பி இரு கட்சிகளிலும் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். இது தான் ஜனநாயகமா?” என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
