மதுரை: “மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம் தொடர்பாக தி.மு.க.வினர் பொய் செய்தி பரப்புகின்றனர்,” என்று மத்திய அமைச்சர் பீயூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பேசினார். இதில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் மற்றும் தமிழக பா.ஜ. பொதுச்செயலாளர் ராம சீனிவாசன் கலந்து கொண்டனர்.
அப்போது பீயூஷ் கோயல் பேசியதாவது:
தி.மு.க.வின் முன்னுரிமை ஊழலே. மு.க. ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், சபரீசன், கனிமொழி உள்ளிட்ட தி.மு.க. வாரிசுகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் போலவே, ஊழலும் அதிகரித்துள்ளது.
மதுரை மாநகராட்சியிலேயே 200 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான டிபிஆர் அறிக்கையை திருத்தி அனுப்புமாறு மத்திய அரசு கேட்டபோதும், அதை திருத்தாமல், மத்திய அரசு மறுத்துவிட்டதாக தி.மு.க.வினர் தவறான தகவலை பரப்புகின்றனர்.
மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கும் தேவையான நிலங்களை மாநில அரசு முழுமையாக கையகப்படுத்தவில்லை. நிலம் இல்லாமல் ரன்வேயை அமைக்க முடியாது. மத்திய அரசு ரன்வே நீட்டிப்பிற்கு தயாராக இருந்தும், தமிழகத்தில் அது இன்னும் ‘ப்ராசஸ்’ நிலையில் உள்ளது.
தமிழின் தொன்மை மற்றும் கலாசாரத்திற்கு மதிப்பளிக்காமல் இழிவுபடுத்திய உதயநிதி ஸ்டாலின் ஒருபோதும் முதல்வராக வரக்கூடாது. திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்ற தடை செய்யப்பட்ட சம்பவத்தையும் மக்கள் மறக்கக் கூடாது.
நிலம் மற்றும் மணல் மாபியாக்கள் தமிழகத்தை ஆளுகின்றனர். தி.மு.க. அரசு வெளியேற வேண்டிய நேரம் வந்துவிட்டது. பிரதமர் நரேந்திர மோடி வழிகாட்டுதலுடன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்ல ஆட்சி அமையும்,” என்று அவர் தெரிவித்தார்.
