காவிரி நீர் விவகாரத்தைத் தொடர்ந்து கர்நாடகாவில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், தமிழக முதல்வர் விஜய் தற்போது கர்நாடகாவிற்கு வர வேண்டாம் என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவிரி விவகாரம் தொடர்பாக அதிகாரிகளுடன் உயர்மட்ட ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவகுமார், கர்நாடகாவில் தற்போது நிலவும் சூழலை கருத்தில் கொண்டு இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
அவர் கூறுகையில், கடந்த ஆண்டு நல்ல மழை காரணமாக தமிழகத்திற்கு தேவையான அளவை விட அதிகமாக தண்ணீர் திறந்து விடப்பட்டதாகவும், 177 டிஎம்சி வழங்க வேண்டிய நிலையில் 400 டிஎம்சிக்கு மேல் தண்ணீர் வழங்கப்பட்டதாகவும் தெரிவித்தார். தற்போது மழைப்பொழிவு குறைவாக இருப்பதால், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் கூறினார்.
மேலும், கபினி அணையில் 83 சதவீதமும், கேஆர்எஸ் அணையில் 36 சதவீதமும் மட்டுமே நீர் இருப்பு உள்ளதாக குறிப்பிட்ட அவர், மத்திய அரசு மற்றும் தமிழக அதிகாரிகள் விரும்பினால் நேரில் வந்து அணைகளின் நிலையை ஆய்வு செய்யலாம் என்றும் தெரிவித்தார்.
தமிழக முதல்வர் விஜயுடன் பேசியதாக கூறிய டி.கே. சிவகுமார், விஜய் கர்நாடகா வருவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாகவும், ஆனால் தற்போதைய சூழலில் அந்த பயணத்தை ஒத்திவைப்பதே சிறந்தது என்றும் தெரிவித்தார். இரு மாநிலங்களின் நலனையும் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை எட்ட முயற்சி நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும், கன்னட அமைப்புகள் அறிவித்துள்ள முழு அடைப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என வேண்டுகோள் விடுத்த அவர், பதற்றமான சூழலில் தமிழக முதல்வர் வருகை தருவது பாதுகாப்பு சவால்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், சூழ்நிலை சீரான பிறகு வேறு தேதியில் சந்திக்கலாம் என்று முதல்வர் விஜயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
