டெல்லியில் வரும் செப்டம்பர் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சிமாநாட்டில் பங்கேற்க சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வர உள்ளார்.
2026-ஆம் ஆண்டுக்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகிக்கும் நிலையில், இந்த முக்கிய உச்சிமாநாடு தேசிய தலைநகர் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், அமைச்சர்கள் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக செப்டம்பர் 12-ஆம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங் இந்தியா வருகிறார். இந்தியா-சீனா எல்லைப் பகுதிகளில் ரோந்துப் பணிகள் தொடர்பாக அண்மையில் இரு நாடுகளும் சுமூக உடன்பாட்டை எட்டியுள்ள நிலையில், அவரது வருகை இருதரப்பு உறவுகளில் முக்கியத்துவம் பெறுகிறது.
குறிப்பாக, 2020-ஆம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு ஜி ஜின்பிங் இந்தியா வருவது இதுவே முதல் முறையாகும். இந்த பயணம் இந்தியா-சீனா இடையேயான வர்த்தக மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இதனுடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் செப்டம்பர் 12-ஆம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிக்ஸ் மாநாட்டில் முக்கிய உலகத் தலைவர்கள் பங்கேற்பதால், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக இந்த மாநாடு அதிக கவனம் பெற்றுள்ளது.
