புதுடில்லி: வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து ஓமன் மற்றும் குவைத் நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் மேற்கொண்டு வரும் தாக்குதல்களால் வளைகுடா நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த சூழ்நிலையில் அங்குள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டு வர மத்திய அரசு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, வளைகுடா பிராந்திய நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடினார்.
அதன்படி, ஓமன் மன்னர் ஹைதம் பின் தாரிக் மற்றும் குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல் காலீத் அல் ஹமாத் அல் முபாரக் அல் சபா ஆகியோருடன் பிரதமர் மோடி பேச்சு நடத்தினார்.
இந்த உரையாடலின்போது, அந்த நாடுகள் மீது நடைபெற்ற தாக்குதல்கள் குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்தார்.
மேலும், அங்கு வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு அந்த நாடுகளின் தலைவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.
