ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த பேட்டர்களுக்கான சமீபத்திய தரவரிசையில் இந்திய வீராங்கனை ஸ்மிருதி மந்தனா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சமீபத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடரில் அலீஸா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக கைப்பற்றியது.
இந்த தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 3 போட்டிகளில் மொத்தம் 89 ரன்கள் எடுத்தார். இதில் ஒரு அரைசதமும் அடங்கும்.
இந்த தொடருக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஐசிசி ஒருநாள் பேட்டர் தரவரிசையில், 790 ரேட்டிங் புள்ளிகளுடன் ஸ்மிருதி மந்தனா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
தென்னாப்பிரிக்க வீராங்கனை லாரா வோல்வர்ட் 782 ரேட்டிங் புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய வீராங்கனை பெத் மூனி 749 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
மேலும் அலீஸா ஹீலி நான்காவது இடத்திலும், ஆஷ்லே கார்டனர் ஐந்தாவது இடத்திலும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் ஒன்பதாவது இடத்திலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 12வது இடத்திலும் உள்ளனர்.
