அபுதாபி: ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் மற்றும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தும் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல்கள் மேற்கொண்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு இந்திய அரசு முக்கிய பாதுகாப்பு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அங்கு வசிக்கும் இந்தியர்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதுகாப்பு தொடர்பான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை அனைவரும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அபுதாபியில் உள்ள இந்திய தூதரகமும், துபாயில் உள்ள துணை தூதரகமும் வழக்கம் போல செயல்பட்டு வருகின்றன. தேவையான சூழலில் புதிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர தேவைகளுக்காக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியர்கள் 800-46342 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும், +971543090571 என்ற வாட்ஸ்அப் எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சமூக வலைதளங்களை பயன்படுத்தும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.
