டா நாங்: வியட்நாமில் நடைபெற்று வரும் ஆசிய யு23 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு 3 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
போட்டியின் இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மகளிர் 68 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் மான்ஸி லேதர், உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த பிருஸாவை 14-1 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
மகளிர் 76 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை காஜல், கிர்கிஸ்தானின் ஸன்பெக்கிவோவை 10-0 என்ற கணக்கில் எளிதில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஆடவர் 63 கிலோ பிரிவில் இந்தியாவின் சுமித், உஸ்பெக் வீரர் ஒஸோட்பெக்கை 12-2 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றார்.
மேலும், இந்திய வீராங்கனைகள் ஸ்வீட்டி மற்றும் நேஹா ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். அஹில்யா வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார்.
ஆசிய யு23 மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
