புதுடில்லி: ஜெர்மனியின் மியுனிச் நகரில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க 22 பேர் கொண்ட இந்திய அணி பயணம் மேற்கொண்டுள்ளது.
உலகக் கோப்பை ஃரைபிள் மற்றும் பிஸ்டல் பிரிவு போட்டிகள் மே 24 முதல் 31ஆம் தேதி வரை மியுனிசில் நடைபெறுகின்றன. இந்த தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை இந்திய துப்பாக்கி சுடும் சம்மேளனம் அறிவித்துள்ளது.
இந்திய அணியில் இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்ற மனு பாக்கர் மற்றும் உலக சாம்பியன்ஷிப் பதக்க வீராங்கனை ஈஷா சிங் ஆகியோர் தனிநபர் பிஸ்டல் பிரிவில் பங்கேற்கின்றனர்.
மே 26ஆம் தேதி மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு போட்டியுடன் தொடர் ஆரம்பமாகிறது. தொடர்ந்து 10 மீட்டர் ஆடவர் ஏர் பிஸ்டல் மற்றும் மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை தகுதிச்சுற்றுப் போட்டிகளும் நடைபெற உள்ளன.
இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 80 நாடுகளைச் சேர்ந்த 696 வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
கடந்த ஏப்ரல் மாதம் கிரனாடாவில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஒரு தங்கப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் ராஹி சர்னோபத், சாம்ராட் ராணா, ருத்ரான்ஷ் பாட்டில், அனிஷ் பன்வாலா, ஐஸ்வரி பிரதாப், இளவேனில் வாலறிவன் உள்ளிட்ட அனுபவம் வாய்ந்த வீரர்களுடன், சூரஜ் சர்மா, சாக்ஷி படேகர், உதயவீர் சித்து போன்ற இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர்.
