சென்னை: போக்குவரத்துத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.23 லட்சம் மோசடி செய்ததாக, முன்னாள் திமுக அமைச்சர் சிவசங்கர் மீது ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரி ஒருவர் சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ளார்.
ஓய்வுபெற்ற சிறப்பு உதவி ஆய்வாளர் (SSI) சீனிவாசன் அளித்துள்ள புகாரில், தனது மகனுக்கு போக்குவரத்துத்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, அப்போதைய அமைச்சர் சிவசங்கர் ரூ.23 லட்சம் கேட்டதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அமைச்சர் சிவசங்கருக்கு நெருக்கமானவர் என அறிமுகமான இளஞ்செழியன் என்பவரின் வங்கிக் கணக்கில் அந்தத் தொகையை செலுத்தியதாகவும், பின்னர் சென்னை தலைமைச் செயலகத்தில் சிவசங்கரை நேரில் சந்திக்கும் ஏற்பாட்டையும் இளஞ்செழியன் செய்ததாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தச் சந்திப்பின்போது, தனது மகனுக்கு அரசு வேலை உறுதியாக கிடைக்கும் என்றும், பெற்ற பணம் தன்னிடம் வந்துவிட்டதாக சிவசங்கர் தெரிவித்ததாக சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார். ஆனால், பணம் பெற்ற பிறகும் வேலை வழங்காமல் ஏமாற்றியதாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.
இந்தப் புகாரின் அடிப்படையில், முதற்கட்டமாக இளஞ்செழியன் மீது சென்னை அசோக் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். சிவசங்கர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட உள்ளது.
