அந்தமான் கடல் பகுதியில் இயற்கை எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்.
நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளங்கள் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அந்தமான் கடல் பகுதியில் நடைபெற்ற ஆய்வில் முக்கிய கண்டுபிடிப்பு நிகழ்ந்துள்ளது.
அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஸ்ரீ விஜயபுரம்-3 பகுதியில், அந்தமான் தீவுகளின் கிழக்குக் கடற்கரையிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை எரிவாயு வளம் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு, அந்தமான் கடலில் உள்ள எரிசக்தி வளங்களின் திறனை மேலும் உறுதிப்படுத்துவதாகவும், அப்பகுதியில் நடைபெற்று வரும் ஆய்வுப் பணிகளுக்கு குறிப்பிடத்தக்க வெற்றியாகவும் கருதப்படுகிறது.
சுமார் 355 மீட்டர் ஆழத்தில் இயற்கை எரிவாயு இருப்பது கண்டறியப்பட்டுள்ள நிலையில், 1,900 மீட்டருக்கும் அதிகமான ஆழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட சோதனைகள் மூலம் தொடர்ச்சியான எரிப்பு நிகழ்ந்ததாகவும், இதன் மூலம் எரிவாயு இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எரிவாயுவின் தரம் மற்றும் தன்மையை ஆய்வு செய்வதற்காக Oil India Limited மாதிரிகளை சேகரித்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் ஹைட்ரோகார்பன் வளங்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் நோக்கில், எதிர்காலத்தில் கடலோரப் பகுதிகளில் மேலும் பல ஆழ்கடல் மற்றும் அதி ஆழ்கடல் ஆய்வுக் கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
