திண்டிவனத்தில் எம்.எல்.ஏ. அலுவலகத்தை திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், இண்டி கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற தேர்தல் முடிவுகளின் மூலம் கூட்டணி ஆட்சி அமையும் சூழலை மக்கள் உருவாக்கியுள்ளதாகக் கூறிய அவர், கூட்டணி ஆட்சி என்பது விசிகவின் நீண்டகால கனவாக இருந்ததாகவும் தெரிவித்தார். இந்த மாற்றத்தை உருவாக்கிய வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
மேலும், தவெக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழலில், அதிமுக அல்லது பாஜக ஆதரவை நாடாமல், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி உள்ளிட்ட மதச்சார்பற்ற கட்சிகளின் ஆதரவை பெற்றதாக அவர் குறிப்பிட்டார்.
ஆரம்பத்தில் நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியதாக கூறிய திருமாவளவன், விசிக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்று தவெக வலியுறுத்தியதால், தங்களது நிலைப்பாட்டை மறுபரிசீலனை செய்து அமைச்சரவையில் இணைந்ததாக விளக்கமளித்தார்.
அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தாலும், கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைவது குறித்து இதுவரை எந்த விவாதமும் நடைபெறவில்லை என்றும், அந்த விஷயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், சமூகநீதி முற்போக்குக் கூட்டணி தொடர்பாக யாரும் தங்களிடம் பேசியதில்லை என்றும், இந்த விவகாரத்தில் இடதுசாரிகளின் கருத்து சரியானதாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இண்டி கூட்டணி கூட்டத்தில் விசிக நிச்சயமாக பங்கேற்கும் என்றும், அந்த கூட்டணி சிதறாமல் தொடர வேண்டும் என்பதே தங்களது விருப்பம் என்றும் திருமாவளவன் தெரிவித்தார்.
