விழுப்புரம்: ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை இழுப்பது ஜனநாயகத்திற்கு எதிரான செயல் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
முதல்வர் Vijay தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசுக்கு, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு வழங்கி வருகின்றன.
இந்நிலையில் விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த வீரபாண்டியன், தமிழக நலன் தொடர்பாக டில்லியில் பிரதமர் மற்றும் மத்திய நிதியமைச்சரை சந்தித்து முதல்வர் விஜய் வைத்துள்ள கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றார்.
மேலும், அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட அனுமதிக்க வேண்டும், தமிழகத்தில் வான்வழி பாதுகாப்பு அமைப்பை உருவாக்க வேண்டும், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் கர்நாடகாவின் முயற்சியை தடுக்க வேண்டும் மற்றும் மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், ஆளும் கட்சிக்கு ஆதரவாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை தங்களது கட்சிக்கு இழுப்பது ஜனநாயக விரோதமான நடவடிக்கை என்றும், சட்ட விதிகளுக்கு முரணான இத்தகைய செயல்பாடுகளை ஏற்க முடியாது என்றும் அவர் கூறினார்.
கட்சி மாறி வந்துள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் மீண்டும் வாய்ப்பு வழங்கினால், அப்போது தங்களது கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
விவசாயிகளின் பயிர்க் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரிய அவர், தற்போதைய அரசுக்கு எந்தவித சிக்கலும் ஏற்படுத்தாமல், முழு ஐந்து ஆண்டுகளும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு வழங்கும் என்றும், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளில் ஈடுபடமாட்டோம் என்றும் உறுதி அளித்தார்.
