தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சிக் காலத்தில், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்றிதழ் வழங்குவதில் லட்சக்கணக்கில் லஞ்சம் பெறப்பட்டதாக தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. தற்போது தவெக ஆட்சியில் எந்தவித லஞ்சமும் இல்லாமல் அனுமதிகள் வழங்கப்படுவதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் நந்தகுமார் அளித்த பேட்டியில், நர்சரி, மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க பல லட்சம் ரூபாய் கட்டாயமாக வசூலிக்கப்பட்டதாக கூறினார். மேலும், புதிய பள்ளிகளை தொடங்க ரூ.35 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை லஞ்சம் கொடுத்தால் மட்டுமே அனுமதி கிடைத்ததாகவும், பணம் செலுத்தாதவர்களின் கோப்புகள் நீண்ட காலம் நிலுவையில் வைக்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அங்கீகார நடைமுறைகளின் மூலம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் பள்ளிக்கல்வித்துறையின் முன்னாள் நிர்வாகம் மற்றும் சில அதிகாரிகள் தொடர்புடையதாகவும் அவர் கூறினார். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரப்பூர்வ பதில் இதுவரை வெளியாகவில்லை.
