புதுக்கோட்டை மாவட்டத்தில் நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பாக தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், “நாம் பலவீனமான அரசு அல்ல; தண்டனைக்கு அஞ்சாமல் நீர்நிலைகளை ஆக்கிரமிக்கலாம் என்று யாரும் கருதக்கூடாது” என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கடுமையாக எச்சரித்துள்ளது.
ஆலங்குடி அருகே கல்லாலங்குடி பகுதியில் உள்ள சமுத்திரக்குளம் நீர்நிலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 2024-ஆம் ஆண்டு ஆறு மாதங்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால், மாவட்ட ஆட்சியர், தாசில்தார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மனுதாரர் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் பி. புகழேந்தி அமர்வில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நீர்நிலைகளில் அதிகளவில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதால் அதிகாரிகளால் நில அளவீடு செய்யவும், நோட்டீஸ் வழங்கவும் சிரமம் இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து, நில அளவீடு மற்றும் நோட்டீஸ் வழங்கும் பணிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும், அவசியம் ஏற்பட்டால் நில அளவீட்டின்போது தடையுத்தரவு பிறப்பிக்கலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
