தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம், திருக்கண்டியூரில் உள்ள சுமார் 1,300 ஆண்டுகள் பழமையான பிரம்மசிரக்கண்டீஸ்வரர் கோவிலின் நிலத்தில், உரிய அனுமதியின்றி ஈ.வெ. ராமசாமி சிலை நிறுவப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ.) சட்டத்தின் மூலம் வெளியான தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலின் சுற்றுச்சுவர் அருகேயுள்ள நிலத்தில், 1990-ஆம் ஆண்டு ஈ.வெ. ராமசாமி சிலை நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக இந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
அதற்கு ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் அளித்த பதிலில், கோவில் நிலத்தில் ஈ.வெ. ராமசாமி சிலை அமைப்பதற்கு அறநிலையத்துறை எந்தவித அனுமதியும் வழங்கவில்லை என்று அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அடிப்படையாகக் கொண்டு, கோவில் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கோவில் சொத்துக்களை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என பக்தர்கள் கேள்வி எழுப்புவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ராம ரவிக்குமார் கூறுகையில், கோவில் நிலத்தில் அனுமதியின்றி சிலை நிறுவப்பட்டிருப்பதுடன், அதன் அடிப்பகுதியில் இடம்பெற்றுள்ள சில வாசகங்கள் பக்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும், அருகில் சட்டவிரோதமாக கட்சி கொடிக்கம்பமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கோவில் நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலையை அகற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி, ஹிந்து சமய அறநிலையத்துறை செயலர், கமிஷனர் மற்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை அணுக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
