சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று (ஜூலை 16) நடைபெற்றது. இதில் 2026–27 நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட் மற்றும் அரசின் முக்கிய கொள்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த மாத இறுதிக்குள் தாக்கல் செய்யப்படவுள்ள 2026–27 நிதியாண்டு பட்ஜெட், தவெக அரசின் முதல் பட்ஜெட்டாக இருப்பதால், அதில் இடம்பெற வேண்டிய திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து முதல்வர் விஜய் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் விஜய், ஊழல் தொடர்பான புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி உடனடியாக பறிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்தார். தனது தலைமையிலான அரசு முழுமையான வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும், தவறு செய்பவர்களுக்கு எந்தவித பாரபட்சமும் இன்றி உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், அரசின் எந்தத் துறையிலும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு இடமளிக்கக் கூடாது என்றும், சட்டத்தை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கல்வித்துறை தொடர்பாகவும் முக்கிய அறிவுறுத்தல் வழங்கிய முதல்வர் விஜய், பள்ளி வளாகங்களில் ரீல்ஸ் உள்ளிட்ட சமூக வலைதள நடவடிக்கைகளில் மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடக் கூடாது என்றும், விதிமுறைகளை மீறுவோர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
