சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அமைச்சர் நிர்மல்குமார், சட்டம்-ஒழுங்கு, ஊழல் தடுப்பு மற்றும் அரசியல் நிலவரங்கள் குறித்து பல்வேறு கருத்துகளை தெரிவித்தார்.
லாக்கப் மரணங்கள் தொடர்பாக பேசிய அவர், இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எந்தவித பாரபட்சமும் இன்றி தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசு உறுதியாக இருப்பதாகவும் கூறினார். நாகர்கோவில் சம்பவம் தொடர்பாகவும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், லாக்கப் மரண வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அரசியல் சூழல் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், திமுக, அதிமுக மற்றும் பாஜக இணைந்து ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்து வருவதாக குற்றம்சாட்டினார். தங்களது கட்சி எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயற்சிகள் நடந்ததாகவும், ரூ.50 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மேலும், தற்போதைய ஆட்சியில் “பர்சன்டேஜ் கலாசாரத்திற்கு இடமில்லை; தவெக ஆட்சியில் கமிஷனே கிடையாது” என்று திட்டவட்டமாக தெரிவித்தார். திருவான்மியூர்–உத்தண்டி மேம்பால ஒப்பந்தத்தில் முறைகேடுகள் கண்டறியப்பட்டதால் அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், முறைகேடாக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களை சீரமைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறினார்.
பத்திரப்பதிவு துறையில் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வந்த நடைமுறைகள் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும், இனி அந்தத் துறையில் ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி கைது செய்யப்படுவார்கள் என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
