திருப்பூர் மாவட்டம் கே.செட்டிபாளையத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயாவில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவில், ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர், முன்னாள் முதல்வர் காமராஜரின் ஆட்சியை நினைவுகூர்ந்து, கல்வி வளர்ச்சிக்காக அவர் ஆற்றிய பங்களிப்பை பாராட்டினார். குறைந்த வளங்களுடன் ஆட்சி நடத்திய காமராஜர், தமிழகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு முக்கிய அடித்தளம் அமைத்தவர் என்றும், சமூகநீதி மற்றும் எளிமையான நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தார் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தற்போதைய சமூகத்தில் மதுப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவது கவலைக்குரியதாக இருப்பதாக கூறினார். சமீபத்திய ஆய்வுகளின்படி, 18 முதல் 70 வயதுக்குட்பட்ட ஆண்களில் 24 சதவீதம் பேர் மது அருந்துவதாகவும், அதில் 18 சதவீதம் பேர் மதுவுக்கு அடிமையாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் பயன்பாட்டையும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாக வலியுறுத்திய அவர், ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.
“நாங்கள் சொல்வதை விட மாணவர்களாகிய நீங்கள் சொன்னால் மக்கள் அதிகம் கேட்பார்கள். எனவே, மதுப்பழக்கத்தையும் போதைப்பொருள் பயன்பாட்டையும் எதிர்த்து விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்று மாணவர்களிடம் அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தார்.
