வந்தே மாதரம் விவகாரம்: காங்கிரஸை சாடிய ராஜ்நாத் சிங்
புதுடெல்லி: கட்சி நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்களை மட்டும் பாட காங்கிரஸ் செயற்குழு எடுத்த முடிவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சியில் ‘வந்தே மாதரம்’ பாடப்பட்டபோது, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி உரையாடிக் கொண்டிருந்ததாக பாஜக குற்றம்சாட்டியது. இதற்கு அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக வலியுறுத்தியது.
இதற்கிடையே, கடந்த புதன்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், 1937-ம் ஆண்டு கட்சியின் தீர்மானத்தை மேற்கோள் காட்டி, இனி காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரண்டு சரணங்கள் மட்டுமே பாடப்படும் என முடிவு செய்யப்பட்டது.
ராஜ்நாத் சிங் கண்டனம்
காங்கிரஸின் இந்த முடிவை விமர்சித்து ராஜ்நாத் சிங் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘வந்தே மாதரம்’ பாடலை உரிய முறையில் மதிக்க காங்கிரஸ் மறுப்பது மிகவும் வருத்தமளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இது அரசியலமைப்பு ரீதியாக கவலைக்குரிய போக்கு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களுக்கும், தேசியப் பாடலுக்கும் உரிய மரியாதை அளிக்க மறுப்பவர்களின் தேசப்பற்று குறித்து கேள்வி எழுவது இயல்பானது என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
1937 தீர்மானத்தை சுட்டிக்காட்டி விமர்சனம்
1937-ம் ஆண்டு முஸ்லிம் லீக்கின் கோரிக்கைகளுக்கு காங்கிரஸ் சமரசம் செய்ததாக ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார். இதுபோன்ற சமரசங்கள் நாட்டுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போதும் காங்கிரஸ் தீவிரமான சக்திகளுடன் சமரசம் செய்வது நாட்டின் எதிர்காலத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
காங்கிரஸ் செயற்குழுவின் முடிவு அரசியலமைப்புக்கு முரணானது என்றும், எதிர்காலத்தில் இது தீவிர அரசியல் நெருக்கடியை உருவாக்கக்கூடும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
