ஆக்ரா ரயில் சூட்கேஸ் வழக்கு: கூடுவாஞ்சேரியில் கொலை நடந்தது அம்பலம்
செங்கல்பட்டு: ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் சிவப்பு நிற சூட்கேஸில் சிதைந்த நிலையில் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில், கூடுவாஞ்சேரி அருகே உள்ள வீட்டில் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
கடந்த 5-ம் தேதி ஆக்ரா சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தவர்கள் வைத்திருந்த சிவப்பு நிற சூட்கேஸில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து உத்தரப் பிரதேச ரயில்வே போலீஸார், தமிழக ரயில்வே போலீஸாரின் உதவியை நாடினர்.
சிசிடிவி மூலம் துப்பு
விசாரணையில், சென்னையில் ரயிலில் ஏறுவதற்கு முன்பு ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் சிவப்பு நிற சூட்கேஸுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது சிசிடிவி காட்சிகள் மூலம் தெரியவந்தது.
சூட்கேஸை ரயில் பெட்டியில் வைத்துவிட்டு, ரயில் புறப்படுவதற்கு முன்பே இருவரும் இறங்கி, புறநகர் ரயில் மூலம் கூடுவாஞ்சேரி சென்றதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து கூடுவாஞ்சேரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.
வீட்டில் தடயங்கள்
விசாரணையில் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டிலிருந்து அந்த தம்பதி சூட்கேஸுடன் வெளியேறியது தெரியவந்ததாக போலீஸார் கூறுகின்றனர்.
அந்த வீட்டை சோதனையிட்டபோது, உடலை துண்டித்ததற்கான தடயங்கள் இருந்ததாகவும், பெரிய பாத்திரத்தில் உணவு சமைக்கப்பட்டிருந்ததாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சமைக்கப்பட்ட உணவில் மனித உடல் பாகங்கள் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அந்த பாத்திரம் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பெண் கொலை செய்யப்பட்டதாக சந்தேகம்
இந்த வீட்டில் ஒடிசாவைச் சேர்ந்த மணிக் உதின் லஷ்கர், அவரது மனைவி மஞ்சி மற்றும் ஹையத்துன் நிஷா ஆகியோர் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் வீட்டை வாடகைக்கு எடுத்த தம்பதியுடன் ஹையத்துன் நிஷாவும் அங்கு வசித்து வந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். அவர் தாம்பரம் அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.
ஹையத்துன் நிஷா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவரது தலை இன்னும் கண்டுபிடிக்கப்படாததால், அதனை தேடும் பணியும் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் மணிக் உதின் லஷ்கர் மற்றும் மஞ்சி ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
