வெற்றி திறன் திட்டம்: கல்லூரி மாணவர்களுக்கு ஐஐடி மூலம் திறன் பயிற்சி
சென்னை: வெற்றி திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு சென்னை ஐஐடி மூலம் சிறப்பு திறன் பயிற்சிகள் வழங்கப்படும் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு திட்ட செயலாக்கத்துறை தொடர்பான அறிவிப்புகளை, முதல்வர் விஜய் சார்பில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சி.ரமேஷ் வெளியிட்டார்.
வேலைவாய்ப்புக்கான சிறப்பு பயிற்சிகள்
வெற்றி திறன் திட்டத்தின் கீழ் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில்சார் பாதுகாப்பு, தீ பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கட்டுமான பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் பயிற்சிகள் வழங்கப்படும்.
பயிற்சியை நிறைவு செய்யும் இளைஞர்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்கள் வழங்கப்படும்.
இதன் மூலம் உற்பத்தி, கட்டுமானம், உள்கட்டமைப்பு, சரக்கு மற்றும் போக்குவரத்து, கிடங்கு, மருத்துவமனை, தங்கும் விடுதி மற்றும் எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாக்கப்படும்.
சென்னை ஐஐடியுடன் இணைந்து பயிற்சி
நடப்பு கல்வியாண்டில் உயர் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் உலகளாவிய சான்றிதழ் பயிற்சிகள் வழங்கப்படும்.
மேலும், வெற்றி திறன் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு சென்னை ஐஐடி மூலம் சிறப்பு தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
அப்ளைடு டேட்டாபேஸ் சிஸ்டம், அட்வான்ஸ்டு எலக்ட்ரானிக்ஸ் மேனுபேக்சரிங் உள்ளிட்ட சிறப்பு பயிற்சி படிப்புகள் இதில் இடம்பெறும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய ஐடி பட்டதாரிகளுக்கு வாய்ப்பு
பொருளாதாரத்தில் பின்தங்கிய மற்றும் வேலைவாய்ப்பின்றி இருக்கும் ஐடி பட்டதாரிகளுக்கு சர்வதேச சான்றிதழ் பயிற்சிகள் வழங்கி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக முன்னணி உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களுடன் இணைந்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் படிப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
