காங்கிரஸ் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிக்கிறது: அமித் ஷா குற்றச்சாட்டு
சென்னை: அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடுவது தொடர்பான விதிமுறைகளை காங்கிரஸ் புறக்கணிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம் நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர் தியாகம் செய்த போராட்ட வீரர்களை காங்கிரஸ் அவமதிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வந்துள்ள அமித் ஷா, செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் பேசுகையில், 1937-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் நோக்கில் வந்தே மாதரம் பாடலை இரு பகுதிகளாக பிரித்ததாக குற்றம்சாட்டினார்.
அதே நிலைப்பாட்டை காங்கிரஸ் செயற்குழு தற்போது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும், காங்கிரஸ் நிகழ்ச்சிகளில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என தீர்மானித்திருப்பதாகவும் அமித் ஷா தெரிவித்தார்.
வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவையொட்டி முழுப் பாடலையும் பாடி தேசிய ஒற்றுமையை வலுப்படுத்த பிரதமர் நரேந்திர மோடி முயற்சி செய்ததாகவும் அவர் கூறினார். மேலும், அரசு நிகழ்ச்சிகளில் முழு வந்தே மாதரத்தையும் பாடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமித் ஷா குறிப்பிட்டார்.
இந்த நடவடிக்கையை காங்கிரஸ் புறக்கணிக்க முடிவு செய்திருப்பதாகவும், இது சுதந்திரப் போராட்ட தியாகிகளை அவமதிக்கும் செயல் என்றும் அவர் விமர்சித்தார்.
1937-ம் ஆண்டு நிலைப்பாடு குறித்து விமர்சனம்
வந்தே மாதரம் முழக்கத்தை எழுப்பியதற்காக சுதந்திரப் போராட்ட வீரர்கள் பல ஆண்டுகள் சிறையில் கழித்ததாக அமித் ஷா தெரிவித்தார்.
நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தவர்களின் பங்களிப்பை நினைவுகூர வேண்டிய நேரத்தில், காங்கிரஸ் தனது பழைய கட்சித் தீர்மானத்தை மீண்டும் பின்பற்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், ராகுல் காந்தியின் தலைமையில் காங்கிரஸ் மீண்டும் வாக்கு வங்கி அரசியலை கடைப்பிடிப்பதாகவும் அமித் ஷா விமர்சித்தார்.
