டில்லியில் பாகிஸ்தான் தூதரகம் முன் தடுப்புச்சுவர் அகற்றம்
புதுடில்லி: இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தைச் சுற்றியிருந்த பாதுகாப்பு தடுப்புகளை பாகிஸ்தான் அகற்றியதன் எதிரொலியாக, டில்லியில் பாகிஸ்தான் தூதரகம் முன்பிருந்த தடுப்புச்சுவர்களை போலீசார் புல்டோசர் மூலம் அகற்றினர்.
டில்லியின் சாணக்யபுரி பகுதியில் முக்கிய இடத்தில் பாகிஸ்தான் தூதரகம் அமைந்துள்ளது. தூதரக வளாகத்துக்கு வெளியே பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தடுப்புச்சுவர்கள் மற்றும் பிற தடுப்புகளை டில்லி போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் இணைந்து அகற்றினர்.
தூதரகத்தின் விசா பிரிவுக்கு வெளியே பொதுமக்கள் வரிசையில் நிற்க அமைக்கப்பட்டிருந்த தடுப்புகளும் அகற்றப்பட்டன. பாதுகாப்பு தொடர்பான சில தடுப்புகளும் புல்டோசர் உதவியுடன் இடித்து அகற்றப்பட்டன.
இஸ்லாமாபாத் நடவடிக்கைக்கு பதிலடி
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தைச் சுற்றியிருந்த பாதுகாப்பு தடுப்புகள் மற்றும் வாகன நிறுத்துமிடத்துக்கான கம்பங்களை பாகிஸ்தான் அகற்றியிருந்தது.
இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மூன்று நாட்களுக்குப் பிறகு, டில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் முன்பிருந்த தடுப்புகளை இந்திய அதிகாரிகள் அகற்றியுள்ளனர்.
இதற்கிடையே, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் செர்ஜியோ கோர் ஸ்ரீநகருக்கு சென்றபோது, ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான பகுதிகளில் ஒன்று என தெரிவித்திருந்தார். அவரது கருத்துக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
