புதுடெல்லி: தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலை சட்டப்பூர்வமாக பாதுகாக்கும் நோக்கில், தேசிய கவுரவ அவமதிப்பு தடுப்பு சட்டத்தில் திருத்தம் செய்யும் புதிய மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி இயற்றிய வந்தே மாதரம் பாடல், இந்திய விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தது. இந்தப் பாடல் 1950 ஜனவரி 24-ஆம் தேதி அரசியலமைப்பு நிர்ணய சபையால் தேசிய பாடலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதன் 150-ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு, அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த ஜனவரியில் அறிவுறுத்தியிருந்தது. பின்னர், அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் வந்தே மாதரம் மற்றும் அதனைத் தொடர்ந்து தேசிய கீதமான ஜன கண மன பாடப்பட வேண்டும் என்றும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
இந்த நிலையில், வந்தே மாதரம் பாடலையும் தேசியக் கொடி மற்றும் தேசிய கீதம் போன்ற பாதுகாக்கப்பட்ட தேசியச் சின்னங்களின் பட்டியலில் சேர்க்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.
மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டால், வந்தே மாதரம் பாடலை அவமதித்தல், பாடுவதைத் தடுத்தல், முழுமையாக பாட மறுத்தல் அல்லது பாடலின் பகுதிகளை நீக்கி பாடுதல் போன்ற செயல்கள் சட்டப்படி குற்றமாக கருதப்படும். இத்தகைய குற்றங்களுக்கு அதிகபட்சமாக 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா, வந்தே மாதரம் பாடலுக்கு தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்திற்கு இணையான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்றும், இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை விமர்சித்தும் கருத்து தெரிவித்துள்ளார்.
