சென்னை: சென்னை–பெங்களூரு இடையேயான அதிவேக புல்லட் ரயில் திட்டத்தை செயல்படுத்தும் பணிகளுக்காக தேசிய அதிவேக ரயில் கழகம் (NHSRCL) டெண்டர் வெளியிட்டுள்ளது. சுமார் ரூ.18,000 கோடி மதிப்பிலான இந்த திட்டம் 2035-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரயில்வே அதிகாரிகள் தெரிவித்ததாவது, புதிய டெண்டரின் அடிப்படையில் திருத்தப்பட்ட வழித்தட வரைபடத்தின்படி ஒப்பந்ததாரர்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
மொத்தம் 306 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த அதிவேக வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல், பூந்தமல்லி, அரக்கோணம், சித்தூர், கோலார், கொடிஹள்ளி, ஒயிட்பீல்டு மற்றும் பெங்களூரு உள்ளிட்ட 8 முக்கிய நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. பரந்தூரில் உருவாகும் புதிய விமான நிலையத்திற்கான இணைப்பை கருத்தில் கொண்டு, அங்கு எதிர்கால நிலையமும் திட்டமிடப்பட்டுள்ளது.
மணிக்கு 350 கிலோமீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட்டால், தற்போது சுமார் 7 மணி நேரம் ஆகும் சென்னை–பெங்களூரு பயணம் வெறும் 73 நிமிடங்களாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் முதல் புல்லட் ரயில் நிலையம், சென்னை புறநகர் ரயில் நிலையத்தின் மேற்கு பகுதியில் அமைக்கப்பட உள்ளது. இது சென்னை சென்ட்ரல் மற்றும் மெட்ரோ நிலையங்களுடன் நடைபாதை இணைப்புகள் மூலம் இணைக்கப்படும்.
மேலும், மொத்த வழித்தடத்தில் 28 கிலோமீட்டர் நீளத்திற்கு நிலத்தடி சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இந்த மாபெரும் உள்கட்டமைப்பு திட்டம் தென்னிந்திய போக்குவரத்து வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாக அமையும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
