சென்னை: சென்னை மற்றும் தஞ்சாவூரில் கைது செய்யப்பட்ட கள்ள நோட்டு கும்பலைச் சேர்ந்த நபர்களுக்கு வெளிநாட்டு தொடர்புகள் இருந்ததா, அவர்களின் பின்னணியில் பயங்கரவாத அமைப்புகளின் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஷபீக் ரகுமான் (37) என்பவர், ஜவுளி வியாபாரி என்ற பெயரில் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர் தனியார் விடுதியில் தங்கி இருந்த நிலையில், கள்ள நோட்டு வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.11 லட்சம் மதிப்புள்ள கள்ள நோட்டுகள், ரூ.11.21 லட்சம் மதிப்புள்ள அசல் இந்திய ரூபாய் நோட்டுகள் மற்றும் ரூ.27.59 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், தஞ்சாவூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (40) என்பவரும் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து ரூ.22.79 லட்சம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கூறுகையில், கைதானவர்களிடம் இருந்த நான்கு பாஸ்போர்ட்களை ஆய்வு செய்தபோது, அவர்கள் பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது தெரியவந்துள்ளது. ஜவுளி வியாபாரம் தொடர்பாக சென்றதாக அவர்கள் விளக்கம் அளித்தாலும், விசாரணையில் வழங்கிய தகவல்கள் திருப்திகரமாக இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், வெளிநாடுகளில் யாரை சந்தித்தார்கள், கள்ள நோட்டுகள் எவ்வாறு கிடைத்தன என்பது குறித்தும் தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. கைதானவர்களின் மொபைல் போன் தொடர்புகளும் சந்தேகத்திற்கிடமாக இருப்பதால், பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்ததா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு தொடர்பாக, சென்னையைச் சேர்ந்த புவனேஸ்வரி என்பவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
