வெலிங்டன்: பிரதமர் நரேந்திர மோடியின் நியூசிலாந்து அரசுமுறைப் பயணத்தை முன்னிட்டு, இந்தியா–நியூசிலாந்து இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஷன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியா மற்றும் ஆஸ்திரேலியா பயணங்களைத் தொடர்ந்து, பிரதமர் மோடி அடுத்த கட்டமாக நியூசிலாந்து செல்ல உள்ளார். கடந்த 40 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் என்பதால் இந்த விஜயம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மோடியின் வருகைக்கு முன்பாக, சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்ட பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஷன், இந்தியாவுடனான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நியூசிலாந்தின் ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என்று தெரிவித்தார்.
மேலும், இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த முதல் நாளிலிருந்தே, நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் சுமார் 57 சதவீத பொருட்களுக்கு சுங்கவரி இல்லாத சலுகை கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா–நியூசிலாந்து இடையிலான வர்த்தக ஒத்துழைப்பை விரிவுபடுத்தும் முக்கிய நடவடிக்கையாக இந்த ஒப்பந்தம் கருதப்படுவதுடன், பிரதமர் மோடியின் பயணத்தின் போது இருதரப்பு உறவுகள் தொடர்பாக மேலும் பல முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
