புதுடில்லி: துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியில், குறைந்த வயதில் அரைசதம் அடித்த வீரர் என்ற 57 ஆண்டுகால சாதனையை வைபவ் சூரியவன்ஷி முறியடித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்று வரும் துலீப் கோப்பை அரையிறுதிப் போட்டியில் மத்திய மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலம் அணிகள் மோதுகின்றன. இதில் கிழக்கு மண்டல அணிக்காக களமிறங்கிய இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி, அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் அரைசதத்தை எட்டினார்.
இதன் மூலம் 15 வயது 175 நாட்களில் துலீப் கோப்பை வரலாற்றில் அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை வைபவ் படைத்தார்.
இதற்கு முன்பு 1969-ம் ஆண்டு லக்ஷ்மண் சிங், 16 வயது 23 நாட்களில் அரைசதம் அடித்து இந்த சாதனையை தன்வசம் வைத்திருந்தார். சுமார் 57 ஆண்டுகளாக நீடித்து வந்த அந்த சாதனையை தற்போது வைபவ் சூரியவன்ஷி முறியடித்துள்ளார்.
இந்தப் போட்டியில் தொடர்ந்து அதிரடி காட்டிய வைபவ், 81 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 92 ரன்கள் எடுத்தார். சதத்தை நெருங்கிய நிலையில் வெறும் 8 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அவரது சிறப்பான ஆட்டம் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வட்டாரத்தினரிடையே பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
மேலும், போட்டியின் முதல் நாளில் கிழக்கு மண்டல அணியின் கேப்டன் இஷான் கிஷனுக்கு மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்குப் பதிலாக சுமார் ஒரு மணி நேரம் வைபவ் சூரியவன்ஷி தற்காலிக கேப்டனாக செயல்பட்டார்.
இதன் மூலம் முதல் தர உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகக் குறைந்த வயதில் ஒரு அணியை வழிநடத்திய வீரர் என்ற மற்றொரு சிறப்பையும் வைபவ் பெற்றுள்ளார்.
