சென்னை: டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் மதுபானங்களை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் தொகைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் விக்னேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், டாஸ்மாக் கடைகளில் ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் சம்பந்தப்பட்ட ஊழியருக்கு முதற்கட்டமாக 3 மாதங்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படும் என்றும், அதே தவறு மீண்டும் தொடர்ந்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
இதனிடையே, கள்ளச்சாராயம் காய்ச்சுதல் மற்றும் கள்ள மதுபான விற்பனை உள்ளிட்ட குற்றங்களுக்காக சிறை தண்டனை அனுபவித்து, பின்னர் மனம் திருந்தி வாழ்பவர்களுக்கு வழங்கப்படும் மறுவாழ்வு நிதி ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்படும்.
கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்த ரூ.2.58 கோடி மதிப்பில் நவீன உபகரணங்கள் மற்றும் வாகனங்கள் வழங்கப்படும். மேலும், இ-கலால் இணையவழி சேவைகள் ரூ.1.69 கோடி செலவில் முழுமையாக மின்னணு மயமாக்கப்படும்.
கள்ளச்சாராயம், போலி மதுபானங்கள் மற்றும் போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கான நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும். இளைஞர்களிடையே சமூக வலைதளங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.2 கோடி ஒதுக்கப்படும்.
தமிழகத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையில் வலுவான மெத்தனால் பயன்பாட்டுக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகள்
டாஸ்மாக் சில்லறை விற்பனைக் கடைகளில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு செப்டம்பர் 1 முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023, விற்பனையாளர்களுக்கு ரூ.30,280, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,680 என ஊதியம் உயர்த்தி வழங்கப்படும். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.486.90 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.
மேலும், டாஸ்மாக் ஊழியர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20 ஆயிரம் வழங்கப்படும். ஆண்டுதோறும் 3 சீருடைகளுக்காக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும்.
கடைகளில் தூய்மைப்பணி மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்ய மாநகராட்சி கடைகளுக்கு மாதம் ரூ.5,000, நகராட்சி மற்றும் பேரூராட்சி கடைகளுக்கு ரூ.4,000, கிராமப்புற கடைகளுக்கு ரூ.3,000 வழங்கப்படும்.
டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் 8 மணி நேர பணி, வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை மற்றும் மாதத்திற்கு 2 நாட்கள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும். மேலும், தகுதியுடைய 250 ஊழியர்களை சிறப்புத் தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார்.
