பிஸ்கெக்: கிர்கிஸ்தானில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஈரான் அதிபர் மசூத் பெஜெஸ்கியான் மற்றும் ஆர்மீனியா பிரதமர் நிகோல் பஷின்யான் ஆகியோரை தனித்தனியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
உஸ்பெகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு கிர்கிஸ்தான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க உள்ளார்.
இதனிடையே, ஆர்மீனியா பிரதமர் நிகோல் பஷின்யானை சந்தித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.
குறிப்பாக பாதுகாப்பு, பொருளாதாரம், மருந்துத் துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கலாசாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
மேலும், மேற்காசியாவில் நிலவும் சூழ்நிலை உள்ளிட்ட சர்வதேச மற்றும் பிராந்திய விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ஈரான் அதிபர் மசூத் பெஜெஸ்கியானையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகள் மற்றும் பிராந்திய நிலவரங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஈரானில் ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பாக பிரதமர் மோடி, மார்ச் மாதம் அதிபர் பெஜெஸ்கியானுடன் தொலைபேசி வாயிலாக பேசியிருந்தார். அப்போது, இந்தியாவின் நிலைப்பாட்டை எடுத்துரைத்த பிரதமர் மோடி, அனைத்து பிரச்னைகளுக்கும் பேச்சுவார்த்தை மற்றும் தூதரக வழிமுறைகள் மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.
