மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியில் அமர்த்துவதை தற்காலிகமாக தவிர்க்க வேண்டும் என்று கப்பல் உரிமையாளர்கள், மேலாளர்கள் மற்றும் ஆட்கள் தேர்வு செய்யும் நிறுவனங்களுக்கு கடல்சார் நிர்வாகப் பொது இயக்குநரகம் (DGMA) அறிவுறுத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியை மூடியுள்ளதாக அறிவித்துள்ள ஈரான், அந்தப் பகுதியில் செல்லும் சில கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதல்களில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததுடன், சிலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு இந்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த சூழலில், மறு உத்தரவு வரும் வரை ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணிக்கும் கப்பல்களில் இந்திய மாலுமிகளை நியமிக்க வேண்டாம் என டிஜிஎம்ஏ தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது.
மேலும், பாரசீக வளைகுடா, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய கடல் பகுதிகளில் இயங்கும் அனைத்து கப்பல்களும் உயர்மட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அதிகாரிகள் வெளியிடும் பயண எச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஆலோசனைகளை தொடர்ந்து கண்காணித்து, சர்வதேச கப்பல் மற்றும் துறைமுக பாதுகாப்பு (ISPS) நெறிமுறைகளின்படி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் டிஜிஎம்ஏ அறிவுறுத்தியுள்ளது.
