அமெரிக்காவின் 250-வது சுதந்திர தின நிறைவு விழாவில் அதிபர் டொனால்டு டிரம்ப் ஆற்றிய உரை அரசியல் வட்டாரங்களில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் பாரம்பரிய உரைக்கு பதிலாக, தனது அரசியல் கொள்கைகளையும் தேர்தல் தொடர்பான கருத்துகளையும் அவர் முன்வைத்தது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் நடைபெற்ற ‘Salute to America’ நிகழ்ச்சியில் பேசிய டிரம்ப், “மனித வரலாற்றின் மிகப் பெரிய சாதனைகளில் ஒன்று அமெரிக்கா” என்றும், “அமெரிக்க வரலாற்றின் மிகவும் பெருமைமிக்க தருணங்களில் இதுவும் ஒன்று” என்றும் குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியின் போது, இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வியட்நாம் போரில் சிறப்புப் படையை வழிநடத்திய முதல் கருப்பின அதிகாரி உள்ளிட்ட பலருக்கு அவர் மரியாதை செலுத்தினார்.
அதே நேரத்தில், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான ‘Save America Act’-க்கு தனது ஆதரவை மீண்டும் வலியுறுத்தியதுடன், அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் துப்பாக்கி வைத்திருக்கும் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் பேசினார். மேலும், கம்யூனிசம் குறித்த தனது விமர்சனங்களையும் மீண்டும் முன்வைத்தார்.
பொதுவாக அமெரிக்க சுதந்திர தின உரைகளில் கட்சி அரசியலைத் தவிர்த்து தேசிய ஒற்றுமையை வலியுறுத்துவது அதிபர்களின் நீண்டகால மரபாக இருந்து வருகிறது. ஆனால், வரவிருக்கும் நவம்பர் மாத இடைக்காலத் தேர்தலை முன்னிட்டு டிரம்ப் தனது அரசியல் நிலைப்பாடுகளை இந்த மேடையில் வெளிப்படுத்தியதால் பல்வேறு தரப்பினரிடையே விவாதம் எழுந்துள்ளது.
இதனிடையே, சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்கா முழுவதும் அணிவகுப்புகள் மற்றும் வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. எனினும், கிழக்கு கடலோரப் பகுதிகளில் நிலவிய கடும் வெப்பம் மற்றும் புயல் எச்சரிக்கை காரணமாக சில நகரங்களில் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.
