கோவையில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், திமுகவின் அரசியல் செயல்பாடுகள் குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆட்சிக்கு வர வேண்டும் என்ற நோக்கில் திமுக குதிரை பேர முயற்சிகளில் ஈடுபட்டதாகத் தோன்றுவதாக அவர் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், “ஆட்சி அதிகாரத்தில் இல்லாத நிலையை திமுகவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எப்படியாவது மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இதுபோன்ற குதிரை பேர முயற்சிகள் நடைபெற்றிருப்பதாக தெரிகிறது” என்றார்.
மேலும், “சில நாட்களுக்கு முன்பு விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். அந்தக் கருத்தின் பின்னணி தற்போது புரிகிறது” என்றும் விமர்சித்தார்.
தற்போதைய அரசின் செயல்பாடுகள் குறித்து பேசிய அவர், “தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட சில முக்கிய வாக்குறுதிகள், ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய காலத்திலேயே நடைமுறைக்கு வந்துள்ளன. சிங்கப்பெண் படை திட்டம் மற்றும் விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட சில அறிவிப்புகள் செயல்படுத்தப்பட்டுள்ளன” என்று குறிப்பிட்டார்.
அதே நேரத்தில், அரசின் முழுமையான பொருளாதார கொள்கை மற்றும் தொழிலாளர், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோரின் பிரச்சினைகள் தொடர்பாக என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பது வரவிருக்கும் நிதிநிலை அறிக்கைக்குப் பிறகே தெளிவாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
“நிதிநிலை அறிக்கையை காத்திருந்து பார்த்தால், இந்த அரசு எந்த திசையில் செல்லப் போகிறது என்பது குறித்து தெளிவான படம் கிடைக்கும்” என்று சண்முகம் கூறினார்.
