சென்னை: தொகுதி மறுவரையறை விவகாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்களே அதிக அளவில் பாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் நடைபெற்ற தென் மாநில முதல்வர்கள் மாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தென் மாநிலங்களின் பல்வேறு பிரச்னைகள் மற்றும் தேவைகள் குறித்து மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். தமிழகத்துக்கு மின்சாரம் மற்றும் வாகனங்கள் தொடர்பான தேவைகள் இருப்பதாகவும், அடுத்த கூட்டத்தை தெலங்கானாவில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தென் மாநிலங்களுக்கான கவுன்சில் கூட்டம் சுமுகமாக நிறைவடைந்ததாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை
தொகுதி மறுவரையறை தொடர்பாக தவெக ஏற்கனவே தெரிவித்துள்ள நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என நிர்மல் குமார் கூறினார்.
மக்களவையில் தற்போது உள்ள 543 தொகுதிகளும் தொடர வேண்டும் என்றும், தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளும் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டால், அதன் தாக்கம் குறிப்பாக தென் மாநிலங்களில் அதிகமாக இருக்கும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
காவிரி, முல்லைப்பெரியாறு விவகாரம்
காவிரி விவகாரம் தொடர்பான வழக்கு ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அது குறித்து மாநாட்டில் விவாதிப்பது சரியாக இருக்காது என அமைச்சர் தெரிவித்தார். இதனால், மாநாட்டில் காவிரி விவகாரம் தொடர்பாக எந்த விவாதமும் நடத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
முல்லைப்பெரியாறு அணை தொடர்பாகவும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். தற்போது உள்ள அணை பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் உறுதியாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் பலமுறை தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரளாவின் விருப்பமாக இருக்கலாம் என்றும், ஆனால் தற்போதுள்ள முல்லைப்பெரியாறு அணை உறுதியாக இருப்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும் நிர்மல் குமார் தெரிவித்தார்.
