புதுடில்லி: காங்கிரஸ் கட்சி தற்போது புதிய முஸ்லிம் லீக் கட்சியாக உருவெடுத்துள்ளதாக பாஜ தலைவர் நிதின் நபின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
டில்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் கூட்டங்களில் தேசியப் பாடலான வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகளை மட்டுமே பாடுவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியானது.
இதுதொடர்பாக பாஜ தலைவர் நிதின் நபின் வெளியிட்ட அறிக்கையில், காங்கிரஸ் தனது அவமதிப்பை தற்போது அதிகாரப்பூர்வ தீர்மானமாக மாற்றியுள்ளதாக விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் கூட்டங்களில் வந்தே மாதரத்தின் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என செயற்குழு தீர்மானித்திருப்பது, தேசியப் பாடலுக்கு அந்த கட்சி அளிக்கும் மரியாதையை வெளிப்படுத்துவதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு இதே விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியதாகவும், அப்போது அதை தனிப்பட்ட சம்பவம் எனக் கூறி கட்சி புறக்கணித்ததாகவும் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
ஆனால் தற்போது அதே நிலைப்பாடு காங்கிரஸ் கட்சியின் கொள்கையாக மாறியுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
வந்தே மாதரம் மற்றும் பாரத மாதா தொடர்பான இந்த அணுகுமுறை, தேசிய உணர்வுகளுக்கு அவமரியாதை செய்வதாகவும், நாட்டுக்காக உயிர்தியாகம் செய்த ஆயிரக்கணக்கான சுதந்திரப் போராட்ட தியாகிகளை அவமதிப்பதாகவும் நிதின் நபின் தெரிவித்துள்ளார்.
மேலும், இது வெறும் அரசியல் தற்காப்பு நடவடிக்கை அல்ல என்றும், வாக்கு வங்கி அரசியலின் தாக்கத்திற்கு காங்கிரஸ் ஆளாகியிருப்பதற்கான உதாரணம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
இதன் மூலம் காங்கிரஸ் கட்சி தற்போது புதிய முஸ்லிம் லீக் கட்சியாக மாறிவிட்டதாக நிதின் நபின் தனது அறிக்கையில் குற்றம்சாட்டியுள்ளார்.
